முதல் செக்பாய்ன்ட் தில்லி. ஆனால் முதல் திருட்டு விமானப் பயணத்திலேயே ஆரம்பம் ஆகிவிட்டது. பறவையின் பார்வையில் நதியிலிருந்து மலைகள் வரை, க்யுமுலசிலிருந்து சிர்ரஸ் வரையான ஒரு சிலிர்ப்பூட்டும் - உணர்ச்சித் திருட்டு.
சில வேளை, திருடப் போகும் பொழுது எதிர்பாரா நிகழ்வுகள் உதயக்கூடும். தில்லியில் கன மழை எதிர்ப் பார்த்தவனுக்கு, வியர்வை வெயில் ஒரு வியப்பூட்டுதல் தான். சாந்தினி சௌக் சுற்றி வந்து, லால் கிலா பார்த்து(வெளியில் மட்டும்) , ஓட்டமும் நடையுமாக சென்று ஏறிய மெட்ரோவில் அந்த முதல் - அனுபவத் திருட்டு.
நதிக்கரையில் ஒரு பாறையின் மீதமர்ந்து, அந்த ஷ்ஷ்ஷ் சத்தத்தை, தூரத்தில் தெரிந்த அருவியின் அழகை, விழவைக்கும் புவியீர்ப்பு புரிதலை, அதோ அந்த மலையின் ஒரு மூலையில் தெரிந்த சிறிய குகையை, யாராவது இருப்பார்களா என்று யோசித்த ந்யூரான்களின் அமைப்பை, ரசித்து வியந்து மகிழ்ந்த - கவிதைத் திருட்டு.
காவிரித் தளத்தில் இருந்து பத்தாயிரம் அடிகள் மேல், மெலிதான மழையில், கஃப்பைன் அருந்திய போது உணர்ந்த - தெய்வீகத் திருட்டு.
திருடியவற்றையெல்லாம், என் நினைவக அறைகளில் தனிச்சிறையில் பாதுகாக்கிறேன்.